கீழடி அகழாய்வு இன்று தொடக்கம்
சென்னை :கீழடியில், ஆறாம் கட்ட அகழாய்வை, முதல்வர் இ.பி.எஸ்., இன்று துவக்கி வைக்கிறார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில், மத்திய தொல்லியல் துறை சார்பில், 2015ம் ஆண்டில் அகழாய்வு துவங்கியது. மூன்று கட்டங்களாக நடந்த இந்த அகழாய்வு, 2017ல், கைவிடப்பட்டது. தமிழக தொல்லியல் துறை, 2018ல் நான்காம் கட்ட அகழாய்வை தொடங்கியது; 2019ல், ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்தது.
இவற்றில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. நான்காம் கட்ட அகழாய்வில், தமிழரின் எழுத்து உள்ளிட்டவற்றின் பழமையை நிரூபிக்க தேவையான சான்றுகள் கிடைத்தன. இந்நிலையில், ஆறாம் கட்ட அகழாய்வு பணியை, முதல்வர் இ.பி.எஸ்., சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, இன்று துவக்கி வைக்கிறார். இந்த அகழாய்வு பணி, தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் நடைபெற உள்ளது. அதேபோல, அடுத்த வாரத்தில், துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுாரில், தொல்லியல் அலுவர் பாஸ்கர் தலைமையிலும், சிவகளையில், கங்கைகொண்ட சோழபுரத்தின் காப்பாட்சியர் பிரபாகரன் தலைமையிலும், அகழாய்வுகள் தொடங்க உள்ளன. ஈரோடு மாவட்டம், கொடுமணலில், தொல்லியல் அலுவலர் ரஞ்சித் தலைமையில் அகழாய்வு நடைபெற உள்ளது.