கொரோனா வைரஸ் பாதிப்பு
யோகாஹாமா: சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இந்த வைரஸ் பாதிப்புக்கு 2000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 75 ஆயிரம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பான் கடலில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என 3,711 பேருடன் அந்த கப்பல் யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டது. பின்னர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கப்பலை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் காலக்கட்டம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதவர்களும், வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களும் கப்பலை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் கப்பலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களை மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பது குறித்து ஜப்பான் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 542 ஆக உள்ளது.