கோர தாண்டவமாடும் கொரோனா
சென்னை : கொரோனா பாதிப்பு உலகையே அதிரவைக்கும் நிலையில், இதன் காரணமாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதே சமயம் 75 ஆயிரத்து 213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மருத்துவ பணியாளர்கள் 3 ஆயிரத்து 19 பேரும் இவர்களில் அடக்கம்.தொற்று பாதித்தவர்களில் 12 ஆயிரத்து 57 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சுமார் 25 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சர்வதேச பொருளாதாரத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கிறது. இது இந்தியா, சீனா இடையே இருக்கக் கூடிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் எதிரொலித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு 3.9% குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறைந்தது
கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் பொருளாதார நடவடிக்கைகள் மந்தம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியை 25%வரை சீனா குறைத்துள்ளது. இதனால் கடந்த 45 நாட்களில் கச்சா எண்ணெய் விலை சுமார் 20% வரை சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் 64.42 டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை பிப்ரவரி 11ம் தேதி 54.03 டாலராக குறைந்துள்ளது. இது இந்தியாவில் பெட்ரோல் விலையிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக ஜனவரி 1ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.20க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.71.86 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.73 க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.68.32 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 45 நாட்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய் 47 காசுகளும் டீசல் விலை 3 ரூபாய் 54 காசுகளும் சரிந்துள்ளன.