நடமாடும் ரேஷன் கடை அமைக்க ஆலோசனை
”பகுதி நேர ரேஷன் கடைகள் கேட்கும் பகுதிகளில், நடமாடும் ரேஷன் கடைகள் அமைப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது,” என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., – சவுந்தரபாண்டியன்:
திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்தில், நெருஞ்சலக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட, நெருஞ்சலக்குடி ரேஷன் கடையை பிரித்து, பள்ளிவயலில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க, அரசு முன்வருமா?
அமைச்சர் ராஜு:
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க, குறைந்தது, 150 கார்டுகள் தேவை என்ற நிபந்தனை பூர்த்தியாகவில்லை.
சவுந்தரபாண்டியன்:
அங்கு வசிப்போர் அனைவரும், விவசாய கூலி தொழிலாளர்கள். எனவே, சிறப்பினமாக கருதி, அங்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். கடைக்கு, எம்.எல்.ஏ., நிதியிலிருந்து, கட்டடம் கட்ட, நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்.
அமைச்சர் ராஜு:
அங்கு நடமாடும் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிறைய பகுதிகளிலிருந்து, பகுதி நேர ரேஷன் கடை கேட்டு, மனுக்கள் வந்துள்ளன. இதுகுறித்து, முதல்வர் ஆலோசனை நடத்தி னார். அப்போது, மக்கள் நலன் கருதி, பகுதி நேர ரேஷன் கடை கேட்கும் பகுதிகளில், நடமாடும் கடைகளை அமைக்க அறிவுறுத்தினார்.இது, தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில், அறிவிப்பு வெளியாகும்.
அ.தி.மு.க., – நரசிம்மன்:
பகுதி நேர ரேஷன் கடை திறக்க, தகுதி இருந்தால், கலெக்டரே உத்தரவிட அதிகாரம் இருந்தது. தற்போது, கலெக்டர் பரிந்துரை மட்டும் செய்ய முடியும் என, மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கலெக்டர்களுக்கு பழையபடி அதிகாரம் வழங்க வேண்டும்.
அமைச்சர் ராஜு:
கலெக்டர்களுக்கு அதிகாரம் உள்ளது; அதில் மாற்றம் இல்லை.
தி.மு.க., கொறடா சக்கரபாணி:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், நகை கடன் வழங்கக் கூடாது என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படு வதுடன், சங்கங்களும் பாதிக்கப்படும்.
அமைச்சர் ராஜு:
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலிருக்க, அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. அதேபோல, இதற்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். விவசாயிகளுக்கு, 11 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, விவாதம் நடந்தது.