2 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி
பிரிஸ்பேன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. ஆலன் பார்டர் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்தது. 9வது வீராங்கனையாகக் களமிறங்கிய ஷிகா பாண்டே அதிகபட்சமாக 24 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தீப்தி ஷர்மா 21, வஸ்த்ராகர் 13, ஷபாலி 12, கேப்டன் ஹர்மான்பிரீத் 11, டானியா 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனை லீ ஆன் கிர்பி 42 ரன், ஹேலி மேத்யூஸ் 25, கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 16, சினெல்லி ஹென்றி 17 ரன் எடுத்தனர். இந்திய அணி பந்துவீச்சில் பூனம் யாதவ் 3, ஷிகா, தீப்தி, ஹர்மான்பிரீத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நாளை மறுநாள் சிட்னியில் நடைபெற உள்ள ஏ பிரிவு தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதுகின்றன.