கச்சா எண்ணெய் விலையின் சரிவை கவனிக்கவில்லை: ராகுல் காந்தி தாக்கு
சென்னை: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணிகளால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவற்றின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. இதற்கு கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய காரணமாக கூறப்படுகிறது. அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வள நாடுகளின் அமைப்பு வலியுறுத்தி இருந்தது.
ஆனால் இதற்கு ரஷியா மறுப்பு தெரிவித்தது. இதனால், சவுதி அரேபியா அதிரடி முடிவை எடுத்தது. அதாவது, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, வெளிநாடுகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் என அறிவித்தது. இப்படியான உரசலாலும், ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்து வருவதாலும் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்து வந்தாலும், பெட்ரோல், டீசல் விலை பைசா கணக்கிலே குறைந்து வருகிறது.
கச்சா எண்ணை வீழ்ச்சி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் நீங்கள் மும்முரமாக இருந்தபோது, உலகளாவிய எண்ணெய் விலையில் 35% சரிவை நீங்கள் கவனிக்கவில்லை. இந்தியர்கள் நலனுக்காக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.60-க்கு கீழ் உங்களால் கொணடு வர முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல் விலை குறைப்பதால் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்றும் பதிவிட்டுள்ளார்.
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை:
சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.66.48ஆகவும் உள்ளது.