புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்க நேர்முகத் தேர்வை ரத்துசெய்து விட்டு, கணினி மூலம் வீடியோ காலிங் முறையில் விர்ச்சுவலாக நேர்முகத் தேர்வை நடத்த ஏற்பாடு செய்துள்ளது கூகுள்.
கொரோனா வைரஸ் (Corona Virus) கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகளுக்கு பரவத் தொடங்கியிருப்பதால், நிறைய முன்னணி டெக் நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், அமேசான் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம், அலுவலகம் வரத் தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளன. கூகுளும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலைபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்க, நேர்முகத் தேர்வை ரத்துசெய்துவிட்டு, கணினி மூலம் வீடியோ காலிங் முறையில் விர்ச்சுவலாக தேர்வை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. மேலும், கூகுள் அலுவலகத்திற்கு வெளியாட்களின் வருகையை முற்றிலுமாகத் தவிர்த்துள்ளது. ட்விட்டரும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதன்மூலம், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தலாம் என டெக் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றன. மேலும், அடுத்த இரண்டு மாதத்திற்கு நடக்கவிருந்த நிகழ்ச்சிகளைப் பல டெக் நிறுவனங்கள் ரத்துசெய்துள்ளன.
ஃபேஸ்புக்கின் F8 மாநாடு, Global Marketting Summit, கூகுளின் Cloud Next, I/o 2020 மற்றும் மைக்ரோசாஃப்ட்டின் MVP Global Summit உள்ளிட்ட பல டெக் நிகழ்ச்சிவுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.