அலுவலக உதவியாளர், டிரைவர் வேலைக்கு திரண்ட பி.எச்.டி. பட்டதாரிகள்
கோவை தொண்டாமுத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இங்கு டிரைவர், அலுவலக உதவியாளர், கிளார்க் உள்ளிட்ட 3 காலி பணியிடங்கள் உள்ளதாகவும், இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் ஒன்றிய அலுவலகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த பணிகளுக்கு 500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். குறிப்பாக டிரைவர் பணிக்கு 68 பேரும், அலுவலக உதவியாளர் பணிக்கு 160 பேரும், கிளார்க் பணிக்கு 248 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் இன்று நடக்க உள்ளதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் அவர்களுக்கு தபால் அனுப்பப்பட்டது.
இதையடுத்து தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை 8 மணி முதலே படித்த ஏராளமான பட்டதாரிகள் குவிய தொடங்கினர்.
இதில் பி.எச்.டி., எம்.பி.எல்., படித்த முதுகலை பட்டதாரிகளும், இளநிலை பட்டதாரிகளும் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர், ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், துணைத்தலைவர் கனகராஜ் ஆகியோர் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர். வெறும் 3 பணியிடங்களுக்கு 500-க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். குறிப்பாக டிரைவர் பணிக்கு ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தது அங்கிருந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.