மாநிலம்

`கோழியால் கொரோனா பரவுவதை நிரூபித்தால் ரூ.1 கோடி தர்றோம்!’ – கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் சவால்

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இந்த வதந்தியைப் பரப்பி இருக்கிறார்கள். இதனால் நாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோழியால் கொரோனா வைரஸ் பரவுவதாக வெளியான தகவலால் ஆந்திரா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் கோழிக்கறி சாப்பிடுவதைத் தவிர்த்து வருகிறார்கள். இதையடுத்து நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு முட்டை, கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் கோழியில் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதாக நிரூபித்தால் 1 கோடி பரிசு அறிவித்துள்ளனர்.

இதுபற்றி தமிழ்நாடு முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணி பேசுகையில், “விலங்கினத்தில் இருந்து மனிதனுக்கோ, மனிதனிலிருந்து விலங்குக்கோ நோய்த் தொற்று ஏற்படாது. அந்த அடிப்படையில் கோழியிலிருந்து கொரோனா வைரஸ் வர வில்லை. ஒரு சிலர் கூறுவதைப்போல கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோழியாக இருந்தாலும் அதைக் குழம்பு வைத்துச் சாப்பிடும்போது கொரோனா வைரஸ் செத்துவிடுமே தவிர பரவாது. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இந்த வதந்தியைப் பரப்பி இருக்கிறார்கள். இதனால் நாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.

கோழிப் பண்ணைகளில் லட்சக்கணக்கான வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்களும், கோழிப் பண்ணை உரிமையாளர்களும் இருக்கிறோம். எங்களுக்குத் தானே முதலில் கொரோனா வைரஸ் தாக்கும். அப்படிக் கோழியால் கொரோனா தாக்குவதாக இருந்தால் நாங்கள் எதற்காகக் கோழிப்பண்ணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். என்பதை மக்கள் உணர வேண்டும்.

எங்கள் தொழிலை முடக்க வேண்டுமென்று திட்டமிட்டே சிலர் இந்த வதந்தியைப் பரப்புகிறார்கள். இதனால் கோழிப் பண்ணையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்திய பொருளாதாரமே கோழிப் பண்ணைகளை நம்பி இருக்கிறது. இதனால் இந்திய பொருளாதாரமே வீழ்ந்துபோகும். அதனால் அரசும் இந்த வதந்தியை நீக்குவதற்குத் தனி கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என எங்களிடம் ஒரு வாரத்துக்கு 2 1/2 கோடி கிலோ கறிக் கோழிகள் விற்பனையாகும். தற்போது 1 கோடி கறிக்கோழிகள் விற்பனையாவதே சிரமமாக இருக்கிறது. உயிரோடு ஒரு கிலோ கோழி 80 முதல் 90 ரூபாய்க்கு விற்கப்படும். தற்போது ஒரு கிலோ கறிக் கோழி 5 முதல் 10 ரூபாய்க்கு விற்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது. ஒரு முட்டை 4.50 பைசாவிற்கு விற்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் பயத்தால் தற்போது ஒரு முட்டை வெறும் 1.30 பைசாவுக்கு விற்கப்பட்டு வருகிறது.

இப்படியே இன்னும் இரண்டு வாரங்கள் நீடித்தால் ஒட்டு மொத்த கோழிப் பண்ணைகளே அழிந்துவிடும். பிற தொழிலைப்போல கோழிப்பண்ணை தொழில் இல்லை. இது உயிர் சம்பந்தப்பட்டது. மீண்டும் அதை உருவாக்கப் பல மாதங்கள் ஆகும். அதனால் போலியான வதந்திகளை யாரும் பரப்பக் கூடாது. உண்மையில் கோழியால் கொரோனா வைரஸ் பரவுவதாக நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்க இருக்கிறோம். சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்து சிக்கன் சூப் சாப்பிட்டதால் கொரோனாவிலிருந்து விடுபட்டதாக டிவி-யில் பேட்டி கொடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் தேவையில்லாமல் கோழியாலும் முட்டையாலும் கொரோனா வைரஸ் பரவுவதாக யாரும் வதந்தி பரப்பக் கூடாது. இதுபற்றி மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button