அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

New Delhi:
யெஸ் வங்கி பண மோசடி விவகாரம் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி, அம்பானிக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கியான யெஸ் வங்கி அண்மையில் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக் கீழ் கொண்டுவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், யெஸ் வங்கியில் பெற்ற கடன்கள் தொடர்பாக அனில் அம்பானி விசாரிக்கப்பட உள்ளார். எனினும், உடல்நிலைகளைக் காரணம் காட்டி அனில் அம்பானி அதிகாரிகள் முன்பு ஆஜராக மேலும் கால அவகாசம் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



