செங்கல்பட்டு

முள்வேலி தடுப்பு

ஊருக்கு வந்த இளைஞர்கள் முதல் வேலையாக தண்டரையிலிருந்து முள்ளிப்பாக்கம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சீமைக் கருவேல மரங்களை வெட்டி வேலி அமைத்தனர்.

கொரோனா தாக்குதல் எதிரொலியாக இந்தியா முழுவதிலும் 21 நாள்களுக்கு 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முதல் நாளிலேயே தடையை மீறி வெளியே சென்றவர்கள் தடியடிக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விநோத காட்சிகளைக் காண முடிந்தது. இரண்டாவது நாளான இன்று செங்கல்பட்டு பகுதியில் வெளிநபர்கள் ஊருக்குள் நுழையாமல் இருக்க முள்வேலி அமைப்பது உள்ளிட்ட காட்சிகளை காணமுடிகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொட்டமேடு பகுதியில் மது வாங்குவதற்காகப் பெரிய இரும்பேடு பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் சென்றிருக்கிறார்கள். அப்போது `பக்கத்து ஊருல எல்லாம் கொரோனா வந்துவிட்டது. அடுத்து உங்க ஊர்லயும் கொரோனா வந்துவிடும்’ எனப் பீதியைக் கிளப்பியுள்ளனர்.

இதையடுத்து, ஊருக்கு வந்த அந்த இளைஞர்கள் முதல் வேலையாக தண்டரையிலிருந்து முள்ளிப்பாக்கம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சீமைக் கருவேல மரங்களை வெட்டி வேலி அமைத்தனர். இதனால் தண்டரை, அமிர்தபள்ளம், ஆதிகேசவபுரம், பெரிய இரும்பேடு, சின்ன இரும்பேடு, முள்ளிப்பாக்கம், ஒரத்தூர் ஆகிய கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வந்தனர்.

ரேஷன் பொருள்களும், மருத்துவப் பொருள்களும் ஊருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்பு அப்பகுதியில் உள்ள சிலர் முள்வேலியை அகற்ற முயன்றனர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த முள்வேலி அப்புறப்படுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button