கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் மலேசிய அரசாங்கம்
கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் மலேசிய அரசாங்கம்
மலேசியாவில் வரும் புதன்கிழமை (ஜூன் 10) முதல் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவிருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து சமுதாய, பொருளியல், சமய நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கவுள்ளன. அவற்றில் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
மலேசிய அரசாங்கம் உள்நாட்டுப் பயணங்களையும் வரம்புடன் கூடிய சமுதாய நடவடிக்கைகளையும் அனுமதிக்கும் என அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் நேற்று அறிவித்தார்.
நாளை தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீடிக்கும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்கீழ் பள்ளிகள் கட்டங்கட்டமாக திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்கள் முன் உரையாற்றிய திரு முகைதீன், “கிருமித்தொற்று விகிதம் குறைந்து வருவதாகவும் அது கட்டுக்குள் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன,” என்று கூறினார்.
மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடந்த மாதம் 4ஆம் தேதி முதன்முறையாக தளர்த்தப்பட்டது. ஆறு வாரங்கள் நீடித்த அந்த ஆணையின்போது பொருளியல் முடங்கியதோடு நாட்டின் எல்லைகளும் மூடப்பட்டிருந்தன. வணிக நடவடிக்கைகளைக் கட்டங்கட்டமாக தொடர அந்நாட்டு அரசாங்கம் முற்படுகிறது. பெரும்பாலான வர்த்தகங்கள் கடந்த மாதம் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சமூக இடைவெளி நடைமுறையை அவை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். எனினும், பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. பெரிய அளவிலான சமூக ஒன்றுகூடல்களும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களும் தடை செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், முழுமையாக முடக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர்த்து, மாநிலங்களுக்கு இடையிலான பயணங்கள் நாளை முதல் அனுமதிக்கப்படும் என்று திரு முகைதீன் கூறினார். பள்ளிகள் கட்டங்கட்டமாக திறக்கப்படும். ஆனால், வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடை தொடர்ந்து நடப்பில் இருக்கும்.
சிகை அலங்காரக் கடைகளும் அழகு பராமரிப்பு நிலையங்களும் நாளை மறுதினம் செயல்பட அனுமதிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. திறந்தவெளி சந்தைகள் இம்மாதம் 15ஆம் தேதி முதல் செயல்படலாம். மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த எட்டு வாரங்களாக பெரும்பாலும் இரட்டை இலக்க எண்ணில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு நடப்பில் இருக்கும் காலகட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகு மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று திரு முகைதீன் சொன்னார். “எனினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் இந்தக் காலகட்டத்தில் கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால், பாதிக்கப்பட்ட இடங்களில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பிறப்பிக்க அரசாங்கம் தயங்காது என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்துகிறேன்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.