சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கா? தலைமைச் செயலாளர் பதில்

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கா? தலைமைச் செயலாளர் பதில்
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,591 பேர் குணம் அடைந்துள்ளனர். 13,085 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பலருக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், வெளியூர்களிலும் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவின.
இதுகுறித்து தலைமை செயலாளரிடம் கேட்டபோது, ‘அது வதந்தி மட்டுமே’, என தெரிவித்துள்ளார். இதனால், சென்னையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான திட்டம் தற்போது அரசு பரிலீசனையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.



