மலேசியாவில் மேலும் 110 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று

மலேசியாவில் புதிதாக 110 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களையும் சேர்த்து, அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 900ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் ஆதம் பாபா கூறினார்.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் 63 பேர் கோலாலம்பூரில் நடைபெற்ற சமய ஒன்றுகூடல் நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர்கள்.
பிப்ரவரி 27 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 16,000 பேர் கலந்துகொண்டனர். அதன் பிறகு சிங்கப்பூர், புருணை, இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்கு திரும்பிய பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு நிலவரப்படி, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 10,500க்கும் அதிகமானோரைத் தொடர்புகொண்டதை மலேசிய சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியது. அவர்களில் 513 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
அவர்களில் ஒருவரான 34 வயது ஆடவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஜோகூர் சுல்தானா ஆமினா மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். நேற்று நிலவரப்படி, மலேசியாவில் கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக இருந்தது.
இந்நிலையில், கோலாலம்பூர் சமய ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் சுமார் 4,000 பேர், கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட முன்வராத நிலையில், அவர்களை மலேசிய போலிஸ் தொடர்புகொள்ளும் என்று அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று தெரிவித்தார்.



