கொரோனா: தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்ட முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர்

கொரோனா தொற்று சிக்கல் உலகம் முழுவதிலும், மலேசியாவிலும் தீவிரமடைந்து வரும் நிலையில் முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டார்.
புதிதாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மார்ச் 19ஆம் தேதி மாலை நிலவரப்படி, மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 900ஆக அதிகரித்துள்ளது.
இத்தகவலை மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் அதம் பாபா தெரிவித்துள்ளார்.
தற்போது கோவிட்-19 நோயாளிகள் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற 16 ஆயிரம் பேரில் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. புரூனேவை சேர்ந்த ஒருவர் நோய்த் தொற்றுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார் என்றும், அவர் மூலமாகவே பலருக்கு வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த 16 ஆயிரம் பேரில் இன்னும் 4 ஆயிரம் பேர் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மலேசிய சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இவர்களில் 2 ஆயிரம் ரோஹிஞ்ஜா அகதிகளும் அடங்குவர் என்று கூறப்படுகிறது.
60 விழுக்காட்டினர் மட்டுமே கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றனர்



