திருச்சிராப்பள்ளி

ஸ்ரீரங்கம், சமயபுரம் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்குத் தடை!

கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சில கோயில்களில் விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு தடைவிதித்துள்ளது. அதன்படி, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்நாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் மரா்ச 31ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதியில்லை எனக் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உறையூர் வெக்காளியம்மன் கோயிலில், வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூச்சொரிதல் நடைபெறுகிறது. அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேரோட்டம் ரத்து: 

திருச்சி மாவட்டம் திருவெள்ளறை பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். ஆனால் தேரோட்டத்தை நடத்தக்கோரி வியாழக்கிழமை, ஊர்பொதுமக்கள் திருச்சி-துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் திருவிழா: 

அதேபோல முசிறி வட்டம், தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் திருவிழாவும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முசிறி சார் ஆட்சியர் தலைமையில், காவல்துறையினர், கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டதுடன், கோயிலில் மரா்ச் 24ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறவிருந்த திருவிழாவை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது. நிலைமையைக் கருத்தில் கொண்டு கோயில் விழாக் குழுவினர் திருவிழாவை ரத்து செய்து அறிவித்தனர்.

Show More
Back to top button