பெண் குழந்தையை அம்மன் கோயிலில் விட்டுச் சென்றது யார்?

திருவள்ளூர் அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை, நரசமங்கலம் அம்மன் கோயிலில், போலீசார் மற்றும் தாசில்தார் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தையை கோயிலில் விட்டுச் சென்றவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த மப்பேடுவில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையில் உள்ளது கொட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்டது நரசமங்கலம் கிராமம். இங்குள்ள அம்மன் கோயிலில், பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று இருப்பதை அவ்வழியாக சென்ற அப்பகுதி மக்கள் கண்டனர். இதுகுறித்து உடனடியாக மப்பேடு போலீசாருக்கும், திருவள்ளூர் தாசில்தார் விஜயகுமாரிக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு எஸ்ஐ சுரேஷ் தலைமையில் போலீசார், தாசில்தார் விஜயகுமாரி ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அம்மன் கோயிலில் இருந்தது பெண் குழந்தை என்பதும், பிறந்து 10 நாட்களே ஆகியிருக்கும் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து குழந்தையை பாதுகாப்பாக போலீசார் மீட்டு, சிகிச்சைக்கென திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிப்பு பிரிவில் நலமுடன் உள்ளது.
இந்த பெண் குழந்தையை அம்மன் கோயிலில் விட்டுச் சென்றது யார்?, கள்ளத் தொடர்பால் பிறந்து இது போன்ற செயலில் யாராவது ஈடுபட்டனரா, வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


