கொரோனாவால் வேலையிழந்த 400 பெண்கள்…

கொரோனாவால் வேலையிழந்த 400 பெண்கள்…
ஒரு மாதத்தில் வேலை வாங்கிக் கொடுத்து அசத்திய எலிசபெத்..!
கொரோனா அச்சம் காரணமாக வீட்டு வேலைக்குச் செல்லும் ஏராளமான பெண்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் இப்போதுதான் பலருக்கு மீண்டும் வேலை கிடைக்கத் தொடங்கியுள்ளது.
சென்னையைப் பொருத்தமட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் வீட்டு வேலை செய்யும் ஏராளமான பெண்கள் உள்ளனர். சமையல், குழந்தை வளர்ப்பு, முதியவர்களைப் பராமரித்தல், வீட்டை சுத்தப்படுத்துதல் ஆகிய வேலைகளை அவர்கள் செய்து வருகின்றனர்.
தினந்தோறும் வந்து செல்வோரும், வீடுகளிலேயே தங்கி வேலை பார்ப்போரும் ஏராளம். ஆனால், கொரோனா பரவத் தொடங்கிய காலம் முதல் வீட்டு வேலை செய்து வந்த பெண்களை வீட்டில் உள்ளவர்கள் வரவேண்டாம் என்று அனுப்பி விட்டனர். இதனால் 400க்கும் மேற்பட்ட பெண்கள் வருமானம் இன்றி வேறு வேலையும் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் சென்னை வடபழனியைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண்மணி இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வுக்கு புதிய வெளிச்சம் காட்டியிருக்கிறார்.
வேலை இல்லாததால் வருமானமும் இல்லாமல் தங்குவதற்கு இடமும் இல்லாமல் நடுத்தெருவில் நின்ற பல பெண்களை அழைத்து வந்து தங்குவதற்கு இடமும் உணவும் கொடுத்து மாதம் 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் வகையில் வேலைக்கு அனுப்பி வைத்து சாதனை படைத்துள்ளார் எலிசபெத்.
இந்தப் பணி மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பசித்தவனுக்கு மீன் கொடுப்பதைக் காட்டிலும் மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே நல்லது என்பார்களே அதை நினைவுகூர்கிறார் எலிசபெத்.
இவரை மனநெழிழ்வோடு பாராட்டுகிறது நியூஸ் தமிழ் 81 தொலைக்காட்சி……!






