பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்வு; வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அளித்த மத்திய அரசு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்ததால் பெட்ரோல், டீசல் விலை பைசா அளவில் தினமும் குறைந்து வந்தது. பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணிகளால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் – டீசல் ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவற்றின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. இதற்கு கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய காரணமாக கூறப்படுகிறது. அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வள நாடுகளின் அமைப்பு வலியுறுத்தி இருந்தது. ஆனால் இதற்கு ரஷியா மறுப்பு தெரிவித்தது. இதனால் சவுதி அரேபியா அதிரடி முடிவை எடுத்தது. அதாவது, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, வெளிநாடுகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் என அறிவித்தது.
இப்படியான உரசலாலும், ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்து வருவதாலும் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்து வந்தாலும், பெட்ரோல், டீசல் விலை பைசா கணக்கிலே குறைந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியடைந்தனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி அறிவித்திருப்பது வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



