திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கார் கண்ணாடியை உடைத்து, பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க இன்று காலை வந்துள்ளார்.
அப்பொழுது திடீரென தான் மறைத்து வைத்திருந்த சைக்கிள் செயின் மற்றும் கத்தியை எடுத்து முன்புறம் நின்றிருந்த கார் கண்ணாடியை உடைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்பறை டேபிள் கண்ணாடியை உடைத்தும், காவலுக்கு இருந்த சாந்தி என்ற பெண் காவலர் தடுக்க முயன்ற போது அவரையும் சைக்கிள் சங்கிலியால் தாக்கியுள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இளங்கோவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.