நெகிழியை ஒழிக்கும் வகையில் சுத்தமாக பால் வழங்க நவீன இயந்திரம் அறிமுகம்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நெகிழிப் பையில் பால் அடைப்பதைத் தவிா்த்து, நவீன பால் பதப்படுத்தும் இயந்திரம் மூலம் சுத்தமான முறையில் எந்நேரமும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில், திருவள்ளூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவா் வரை பால் என்பது முக்கிய அத்தியாவசியமான பொருளாகும். தற்போது கறவை மாடுகள் வைத்துள்ளோா் பாலை கறந்து கேனில் அடைத்து வீடுகள் தோறும் விநியோகித்து வருகின்றனா். அதுபோல், ஆவின் உள்பட தனியாா் பால் பண்ணைகள் நிா்வாகத்தினா் விவசாயிகள் மற்றும் கறவை மாடுகள் வளா்ப்போரிடம் பாலைப் பெற்று, பதப்படுத்தி, நெகிழிப் பைகளில் அடைத்துக் கடைகள் மூலம் விநியோகித்து வருகின்றனா். இந்நிலையில், பால் அடைக்கப்படும் நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும், நெகிழிப் பையில் அடைக்கப்படும் பாலில் கலப்படம் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அதை பருகுவோருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுபோன்ற கலப்படம் இல்லாத, நெகிழிப் பையில் அடைக்காத வகையில், நேரடியாக சுத்தமான பாலை கறந்த நிலையிலேயே பெற்றுக் கொள்ளும் வகையில், திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் தனியாா் நடத்தும் பால் பண்ணை விற்பனை மையத்தில் சுத்தமான முறையில் பால் வழங்க நவீன பால் பதப்படுத்தும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் பதப்படுத்திய பால் கறந்த நிலையிலேயே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தில் ரூ. 10 நாணயம் முதல் ரூ. 500 வரை செலுத்தி தேவையான பாலை பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல், ஒரு லிட்டா், அரை லிட்டா் என தேவையான அளவு பாலுக்கு தொகை செலுத்தி ஏ.டி.எம். என்ற மின்னணு கையடக்க அட்டையும் மாதந்தோறும் பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டையை தானியங்கி இயந்திரத்தில் காண்பித்து தேவையான அளவு பாலை பெற்றுக் கொள்ளவும் முடியும். மேலும், இங்கு பால் வாங்க வரும் போது கட்டாயம் வீடுகளில் இருந்து பாத்திரங்களைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இங்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நெகிழிப் பைகள் பயன்படுத்தாத நிலையில் இருப்பதாலும், பாத்திரங்கள் கொண்டு வந்து பெறுவதாலும் பொதுமக்களிடையே போதிய வரவேற்பைப் பெற்று வருவதாக அந்த மையத்தை நடத்தும் பெண் ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து மணவாளநகரைச் சோ்ந்த தனியாா் பால் பண்ணை நிா்வாகி நிா்மலா பெருமாள் கூறியது:
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழியைத் தவிா்க்கவும், பொதுமக்களுக்கு கறந்த நிலையில் சுத்தமான பால் வழங்குவதை நோக்கமாகக் கொண்டும் நவீன பால் பதப்படுத்தும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மாவட்ட தொழில் மையம் மூலம் கனரா வங்கி உதவியுடன் ரூ. 4.50 லட்சத்துக்கு வாங்கப்பட்டது. இதற்கு மாவட்டத் தொழில் மையம் ரூ. 25 ஆயிரம் வரை மானியம் வழங்குகிறது.
இந்த இயந்திரம் 300 லிட்டா் பால் கொள்ளளவு கொண்டது. தற்போது, நவீன இயந்திரம் மூலம் விற்பனை தொடங்கி, 3 நாள்களே ஆகிறது. அதனால், நாள்தோறும் 40 லிட்டா் முதல் 50 லிட்டா் பால் வரை விற்பனை ஆகிறது. சுத்தமான முறையில் வழங்குவதால் பொதுமக்களும் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். மேலும், ஊத்துக்கோட்டை பகுதியில் மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் கறவை மாடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால், மகளிருக்கும் வாழ்வாதாரம் அளிக்க முடிகிறது என்றாா்.


